Vinayagar

Vinayagar

Saturday, December 11, 2010

அங்காள பரமேஸ்வரி திருக்கோயில்

                                            புட்லூர் அங்காளபரமேஸ்வரி
                                உற்சவர் புட்லூர் அங்காளபரமேஸ்வரி
                                                        புற்று
                                                     விநாயகர்
  கோயில் மண்டபம்
                                                     மாரியம்மன்
நவக்கிரங்கள்
                                                          தெப்பகுளம்

மூலவர்: புட்லூர் அங்காளபரமேஸ்வரி


இங்கு அம்மன் பிள்ளைதாச்சி வடிவத்தில் கால்களை நீட்டி படுத்த வண்ணம் காட்சியளிக்கிறாள். இங்கு பெண்கள் அதிகமாக வருகிறார்கள். அதனால் குழந்தை இல்லாதவர்கள் இங்கு அதிகமாக வந்து வேண்டிக் கொள்கின்றனர். அம்மனின் பாதத்தில் எலுமிச்சம்பழம் வைத்து, பெண்கள் தங்கள் புடவை முந்தானையை பாதத்தின் அருகே பிடித்து வேண்டுகின்றனர். எலுமிச்சம்பழம் பாதத்தில் இருந்து உருண்டு வந்து முந்தானையில் விழுந்தால் நினைத்தது நடப்பதாக நம்பப்படுகிறது.

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத்தடை இருப்பவர்கள், வீட்டில் பிரச்னை இருப்பவர்கள் புடவை முந்தானையிலிருந்து சிறிது கிழித்து கோயில் வெளியே மண்புற்று அருகே உள்ள வேப்பமரக்கிளையில் கட்டி விடுகிறார்கள்.

பொன்மேனி என்னும் விவசாயி வறுமை காரணமாக தன் நிலத்தை மகிசுரன் என்பவனிடம் அடமானம் வைத்தான். அதே நிலத்திலேயே வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வந்தான்.

மகிசுரன் அசுர குணம் கொண்டவன். ஊர் மக்கள் அனைவரிடமும் இப்படி நிலத்தை அடமானம் வாங்கி கொண்டு, வட்டி மேல் வட்டி போட்டு சொத்தை அபகரித்து வந்தான். பொன்மேனியாலும் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை.

கோபம் கொண்ட மகிசுரன் பொன்மேனியை அடித்து உதைத்தான். ஊரார் முன்னிலையில்,""நீ ஊருக்கு வெளியே இருக்கும் பூங்காவனத்தை சிவராத்திரி ஒரு நாள் இரவில் உழுது, விதைத்து, நீர்பாய்ச்சி பொழுது விடிவதற்குள் முடிக்கவேண்டும்.

இல்லாவிட்டால் தொலைத்து விடுவேன்,''என எச்சரித்து சென்றான். பூங்காவனம் என்பது தீய சக்திகள் உலவும் இடம். தினம் தினம் அடிவாங்கி சாவதை விட, ஒரே நாளில் செத்து விடலாம்.

என தீர்மானித்த பொன்மேனி சிவராத்திரி இரவில் பூங்காவனத்தை அடைந்தான். அங்கு தன் இஷ்ட தெய்வமான கருமாரியை வணங்கி நிலத்தை உழ ஆரம்பித்தான். அப்போது ஒரு முதியவரும், மூதாட்டியும் இங்குள்ள மரத்தின் கீழ் அமர்ந்தார்கள். பாட்டிக்கு தாகத்தில் தவித்தாள். உழுது கொண்டிருந்த பொன்மேனி இதைக் கண்டு பரிதாபப்பட்டு, பெரியவரை அழைத்துக் கொண்டு தண்ணீர் கொண்டு வர சென்றான்.

திரும்பி வந்து பார்த்த போது மூதாட்டியைக் காணவில்லை. அவன் அதிர்ச்சியுடன் முதியவரின் பக்கம் திரும்பிய போது அவரும் அங்கு இல்லை. பின்னர் மீண்டும் உழுதான் பொன்மேனி. அப்போது கலப்பை எதன் மீதோ பட்டு ரத்தம் பீறிட்டது. இதைக்கண்ட பொன்மேனி மயங்கி விட்டான். அப்போது ஒரு அசரீரி,""பயப்படாதே. நான் அங்காள பரமேஸ்வரி. சிவனுடன் முதியவள் வடிவத்தில் வந்த நான், மண்புற்றாக மாறிவிட்டேன்.

ஏர் முனை என்னை குத்தியதால் ரத்தம் பீறிட்டது. வறுமையில் வாடிய நீ என்னை வேண்டியதால் ஈசனுடன் இங்கு வந்தேன். என்னை உழுது, நான் இங்கு இருப்பதை உலகிற்கு எடுத்துக்காட்டிய நீ, இனிமேல் எப்போதும் என்னையும் சிவனையும் பூஜிக்கும் பேறு பெற்றாய்,'' என கூறியது. சிறிது நேரத்தில் அங்கிருந்த மண்ணெல்லாம் விலகி, புற்று தெரிந்தது. அதில் அம்மன் மல்லாந்து படுத்த நிலையில் இருந்தாள். பூங்காவனத்தில் தோன்றியவள் என்பதால் "பூங்காவனத்தம்மன்" என்ற பெயர் சூட்டப்பட்டது.

அருள்மிகு உச்சிப்பிள்ளையார் கோவில்..........

                                மலைக்கோட்டை உச்சி பிள்ளையார்
                                         மலைக்கோயில் தோற்றம்
                                    மலைக்கோயில் நுழைவுவாயில்
                                             மூலவர் உச்சி பிள்ளையார்
                                              உச்சி பிள்ளையார்
                                       கோவிலுக்கு செல்லும் வழி


மூலவர்:  உச்சிப்பிள்ளையார் 

எந்த காரியங்கள் தொடங்கினாலும் இவரை வணங்கி விட்டு தொடங்கினால் காரியங்களில் வெற்றி உறுதி.

திருச்சி என்றாலே மலைக்கோட்டை அதன் அருகில் அகண்டகாவிரி, அடுத்து ஸ்ரீரங்கம். இப்புனித தலத்தை உலகம் முழுவதும் இருந்து வரும் மக்கள்  கண்டு களிக்கின்றனர்.

மகாவிஷ்ணு ராமாவதாரத்தில், ராவணனை வதைத்து சீதையை மீட்டு அயோத்தி சென்றார். விபீஷணன், சுக்ரீவன் மற்றும் அனுமன் ஆகியோரும் உடன் சென்றனர்.

அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப்பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக் கொண்டு விபீஷணன் தெற்கே வந்தான்.

எழில் வனப்புடன் மிகுந்த சோலை நடுவே அகண்ட காவிரியில் சற்று ஓய்வெடுக்க எண்ணிணான். அப்போது, அங்கு சிறுவன் உருவில் நின்று கொண்டிருந்த விநாயகரிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்து விட்டு சென்றான். விநாயகர் சிறிது நேரம் பார்த்து விட்டு அச்சிலையை பூமியில் வைத்து விட்டு அருகில் இருந்த மலையில் போய் அமர்ந்து கொண்டார்.

திரும்பி வந்து வீபிஷணன் சிறுவனைக் காணாமல் மலைத்து போனான். செய்வதறியாது பூமியில் இருந்த சிலையை எடுக்கப்பார்த்தும் அவனால் சிலையை நகர்த்த முடியவில்லை. இதனால் இலங்கைக்கு செல்ல இருந்த ரங்கநாதர், விநாயகரின் அருளால் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளினார்.
தான் சிலையை கொடுத்த அந்த சிறுவன் மலையில் அமர்ந்திருப்பதை பார்த்த வீபிஷணன் கோபமடைந்து, விநாயகர் தலையில் ஒரு குட்டு வைத்தான்என்பது வரலாறு.

உச்சிப்பிள்ளையார் தலையில் இன்றும் அந்த குட்டின் வடு காட்சியளிக்கிறது. இப்படி சிறப்பு வாய்ந்த விநாயகர் தான் தமிழகத்தின் நலன் காக்க அருகில் அமைந்துள்ள ரங்கநாதருடன் ஆண்டாண்டு காலமாய் ஆட்சி செய்து வருகிறார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.....

                                             மீனாட்சி - சுந்தரேசுவரர்
                                                   கோயில் கோபுரம்
                                                               பொற்றாமரைக் குளம்
                                                                 கோவில் பிரகாரம்
 
                                                     இரவில் கோயில் கோபுரம்


 
                                                      தேரோட்டம்



சிவபெருமான் பெயர்: சுந்தரேசுவரர், சொக்கநாதர், சோமசுந்தரர்
அம்மன்:  மீனாட்சி

தமிழ்நாட்டில் உள்ள சிவபெருமானுக்கான கோவில்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சிறப்புடைய ஒன்றாகும். இத்தலத்தில் மீனாட்சி அம்மன் சந்நிதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கி அதன் பிறகு சுந்தரேசுவரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது.

சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது.

விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது. 

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி அம்மன் பட்டாபிசேகம், மீனாட்சியம்மன் தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

உலக அதிசயங்களைத் தேர்வு செய்வதற்காக ஒரு இணையதளம் செய்த முயற்சியில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும் ஒன்றாக இடம் பெற்றிருந்தது. 

 சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராஜர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்.

இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. மேலும் அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.